Friday, 19 October 2012

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி....


உலகில் தம்மைப் பற்றி பெருமை பாராட்டுகிறவர்கள் தான் அதிகம். ”நான் படிச்ச படிப்பு தெரியுமே?”, என்ர பரம்பரையே இப்படித்தான்..., ”நானே ஒரு பணக்காரன், எனக்கே இவை பணச்செருக்கு காட்டினம்”, ”என்னை யாரும் வெல்ல முடியுமே?”, ”நான் பைபிளோடயே வாழ்றனான், எனக்கே பைபிளைப் பற்றிக் கதைக்கினம்...” இப்படி பேசுகிறவர்களாயும், மனதுக்குள் குமுறுகிறவர்களாயும் நாம் வாழ்கிறோம். தம்மைக் குறித்து மேன்மை பாராட்டுகிறவர்களுக்காகத் தேவன் தந்த வார்த்தை தான் “உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார்.”  (1கொரி.1:27-29)

இந்த வேத வாக்கியத்தின் ஆதாரபூர்வமான பல நிகழ்வுகளை நாம் பரிசுத்த வேதாகமத்திலேயே காணலாம். பலமானதை வெட்கப்படுத்த பலவீனமானதைத் தெரிந்து கொண்டார் என்ற வசனத்தைப் பார்த்த போது எனக்கு உடனடியாக நினைவு வந்தது தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு முன்பாக தேவன் கோலியாத் என்ற பெரும் பலம் வாய்ந்தவனை வெட்கப்படுத்திய சம்பவம் தான்.

நம்மில் பலர் நாம் பரிசுத்தவான்கள் என்று எண்ண ஆரம்பிக்கும் போது, தவறு செய்கின்ற மற்றவர்களை இலகுவாக பாவிகள் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் எந்த அளவிற்கு நமது பரிசுத்தத் தன்மையில் திடமாய் இருக்கிறோம் என்பதை சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது நாமே புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் யேசுக்கிறீஸ்து பாவிகளை அதிகம் அன்பு கூர்ந்தார். பாவிகளுக்காகவே இந்த பூமியில் அவதரித்தார். இன்றுவரை அவருடைய பரிசுத்தத்தன்மைக்கு முன், உலகத்தின் எந்த மனிதனும் தம்மைப் பரிசுத்தமானவன் என்று மேன்மை பாராட்டமுடியவில்லை..
அந்தக் காலத்தில் எத்தனையோ பேர் யேசுவை தம் வீட்டுக்கு அழைக்க ஆவலாக இருக்கும்போது. பாவி என்று விமர்சிக்கப் படுகிற, மற்றவர்களோடு ஒப்பிடும் போது தோற்றத்தில் குள்ளனாக இருந்த சக்கேயுவின் வீட்டுக்கு யேசு சென்றார் என்று வேதம் சொல்கிறது.

தேவன் ஞானிகளை. அவருடைய எல்லையற்ற ஞானத்தின் முன்னே தன்னை ஞானி என்று சொல்லிக் கொள்பவன் யார்? இதுபோலவே யேசுவோடு கூட இருந்தவர்கள் பெரிதும் படித்தவர்களோ அல்லது செல்வாக்கு உடையவர்களோ அல்ல. யேசு தெரிந்து அனுப்பிய 70 பேரும் அவரிடம் திரும்பிவந்து “ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்கு கீழ்படிகின்றது” என்று கூறிய போது, யேசு கிறீஸ்து “இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” (லூக்கா 10:21) என்று பிதாவைத் துதிக்கிறார்.

இவை மூலமாக தம்மட்டில் நொந்துபோயிருக்கும் உள்ளங்களுக்கு தேவன் ஒரு நல்ல செய்தி சொல்லுகிறார். ”நான் தாழ்ந்து போனேனே... என் வாழ்வு இப்படி தாழ்ந்து போய் கிடக்கிறதே... எல்லாவற்றிலும் குறைவுள்ளவனாய் இருக்கிறேனே என்று பரிதவிக்கிறீர்களா?... என் அன்புச் சகோதரர்களே... தேவன் சொல்லும் நல்ல செய்திய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களையும் என்னையும் தேவன் பயன்படுத்த வல்லவராக இருக்கிறார்... அவர் நம்மை பயன்படுத்த விரும்புகிறார்...

சுவிசேசத்தை அறிவிக்க எத்தனையோ பேர் இருக்க, தண்ணீர் மொள்ள வந்த சமாரியப் பெண்ணிடம் தன்னை வெளிப்படுத்தினார். நம் தேவன் நல்லவர்.
எமக்கு கிடைத்துள்ள விசேஷித்தவை எவையும் (குணம், திறமை, பட்டம், பதவி, அழகு போன்றன) தேவனால் எமக்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்கள். அவை குறித்து மேன்மை பாராட்டாமல், நம்மைத் தாழ்த்தி, நம் தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்..
அதனைத்தான் தேவன் கூறுகிறார், “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடைக் காரனாயிருக்கக் கடவது” (மாற் 9,10;43-44). இதைத்தான் எம்மை நேசிக்கும் ஆண்டவர் எம்மிடம் எதிர்பார்ப்பது.

எனவே கிறீஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே.... எம்மைத் தரை மட்டும் தாழ்த்தி தேவனை உயர்த்துவோம்... அவர் நம்மை உயர்த்துவார்..
ஆமென்

Friday, 11 May 2012

பொய் சொல்ல தேவன் மனிதனல்ல....“பொய் சொல்ல தேவன் மனிதனல்ல, மனம் மாற அவர் மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?”- எண் 23:19

கிறீஸ்துவின் அன்புக்குரிய சகோதரரே, சகோதரிகளே!
நம் தேவன் பெரியவரும், பராக்கிரமசாலியுமாய் இருக்கிறார். வல்லமையான, ஜீவனுள்ள வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் நமக்காக தந்திருக்கிறார். அனைத்தையும் நமக்காகத் தந்த தேவன் எங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்... என் மகனே, மகளே நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை விசுவாசிக்கிறாயா?....அப்படியானால் சுதந்தரித்துக் கொள்...

வேதபுத்தகம் தேவ செய்திகளும் நமக்கான வாக்குத்தத்தங்களும்  அடங்கிய மகா சமுத்திரம். அதனூடே நாம் கடந்து செல்லும் போது கர்த்தர் தாம் வாக்களித்தவற்றில் ஒன்றையாகிலும் செய்யாமல் விட்டதில்லை என்பதற்கு சான்றுகள் பல பல...
ஆபிரகாமைக் கர்த்தர் தமது மக்களை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், சபிப்பவர்கள் சபிக்கப்படுவார்கள் என்று ஆசீர்வதிக்கிறார். (ஆதி 12:3) அதன்படியே இறுதிவரைக்கும் இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தை மீண்டும் கர்த்தர் எண்ணாகமம் 24:9 வசனத்தில் ஞாபகமூட்டுகிறார்.

மனிதர்கள் பொய் சொல்பவர்களாகவும், அடிக்கடி மனம் மாறுபவர்களாகவும் இருக்கின்றனர். இதனை நாம் அன்றாட வாழ்வில் காணக்கூடியதாக வேதாகமத்திலே காணக்கூடியதாக உள்ளது. பார்வோன் மன்னன் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து செல்ல அனுமதித்து விட்டு அவர்கள் சமுத்திரக் கரையில் பாளையமிறங்கிய போது அவன் மனம் மாறினான். சாவிலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்று கூறிய யேசுவின் பிரதான சீடன் பேதுறு அவரை மறுதலித்தார். ஆனாலும் நம் தந்தை வாக்கு மாறாதவராக இருக்கிறார்.

சகோதரரே, மற்றவர்கள் நம்மை எப்படிக் கணிப்பிடுகிறார்கள் என்று வேதனைப் படுகிறீர்களா? மற்றவர்களுடைய பார்வைக்கு நான் தாழ்ந்தவனாக இருக்கிறேனே என்று சோர்ந்து போகிறீர்களா? இன்று உங்களுக்கு ஒரு நற்செய்தி... நம் இரட்சகர் யேசு சொல்கிறார் “நீங்கள் விசேஷித்தவர்கள்” –மத்தேயு 7:26-

நாம் விசேஷித்தவர்கள். யேசு எங்களை விசேஷமானவர்களாக எண்ணிய படியால் தான் எம்மை இரட்சிப்பது அவசியம் என எண்ணினார். எம்மை அவர் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக எண்ணிய படியால் தான் எமக்காகத் தன் உயிரைக் கொடுக்கச் சித்தமானார். எங்கள் பரம பிதாவும் எம்மேல் எத்தகைய பிரியம் வைத்திருந்தால், தன் ஒரே குமாரனை எமக்காக நொறுக்கக் கொடுத்திருப்பார்?... அதனால் தான் நாம் விசேஷித்தவர்கள். நாம் விசேஷமானவர்கள் என்றால் தேவன் எமக்காகத் தந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றாமல் இருப்பாரா? இந்த வார்த்தையை அறிக்கை செய்வோமா? பொய் சொல்லாத பரிசுத்தமான தேவகுமாரன் கூறுகிறார்...
நாம் விசேஷித்தவர்கள்... நாம் விசேஷித்தவர்கள்... நாம் விசேஷித்தவர்கள்...
ஏனென்றால் பொய் சொல்ல தேவன் மனிதல்ல..!!!

ஆமென்.

Friday, 20 April 2012

தன் சிறகுகளாலே என்னை மூடினார்...

சாட்சி- 1
ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பலனே, யுத்த நாளில் என் தலையை மூடினீர்.  -சங்140:7

2006 ம் ஆண்டில் இலங்கையில், என் சொந்த ஊரான மன்னாரிலிருந்து வேலை மாற்றம் பெற்று நானும் என் குடும்பத்தினரும் கிளிநொச்சிக்கு சென்று குடியிருந்தோம். அப்பொழுது 4 வருட யுத்த நிறுத்தம் முறிவடைந்து மெல்ல மெல்ல போர் ஆரம்பித்திருந்தது. இறுதியில் 2008ம் ஆண்டில் போர் மும்முரமாகியது. நானும் என் கணவனும் இரண்டு பிள்ளைகளும் எல்லோரையும் போல இடம்பெயரத் தொடங்கினோம். இரண்டு வாரங்களுக்கு ஒரு இடம் என்ற விகித்தத்தில் மாறி மாறி அலைந்தோம். இந்த வேளையில் நான் கொண்டிருந்த ஒரே நம்பிக்கை –ஆண்டவர் நம்மைக் கை விடமாட்டார், எந்த தீங்கும் நமக்கு நேராது என்பதே. இருந்தாலும் அவ்வப்போது நாம் தப்பமாட்டோமோ என்றும் மனம் எண்ணும்.

நான் ஒரு றோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். அப்போது எனக்கு கல்லறை ஆண்டவர் மேலும் (மரித்த யேசுவை கல்லறையில் வைத்திருப்பது போல ஒரு சுருவத்தை ஆலயங்களில் வைத்திருப்பார்கள். அந்த ஆண்டவரை `கல்லறை ஆண்டவர்` என்றும் `கர்த்தர்` என்றும் கூறுவார்கள்.) பரிசுத்த ஆவியின் வல்லமை மீதும் எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இதனால் எப்பொழுதும் பதுங்கு குழிக்குள் இருந்த வண்ணம் கல்லறை ஆண்டவரின் செபத்தை சொல்லியபடியே இருப்பேன். நான் மிகவும் பயந்தவளாகவே இருந்தேன். இந்த நாட்களில் மூன்று தடவைகள் தொண்டு நிறுவனங்களின் ஒன்றுகூடலுக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தது. வலையன்மடம் ஆலயத்தில் வைத்தியர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களும் சேர்ந்து மக்களுடைய நிலை பற்றியும் அந்நேர சேவைகள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். இந்த ஒன்றுகூடலுக்கு நான் சற்று தொலைவிலிருந்துதான் செல்ல வேண்டியிருந்தது. என் கணவனோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, `ஆவியானவரே என்னோடு கூட வாரும், என்னைப் பாதுகாரும்` என்று உச்சரித்துக் கொண்டே செல்வேன். அப்பொழுது ஆவியானவர் எங்கள் தலைகளுக்கு மேலே புறா வடிவிலே தன் சிறகுகளை அகல விரித்துக் கொண்டு வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வேன். அந்தக் கற்பனை என்னைத் தைரியப் படுத்தியது. அது பயங்கர செல்வீச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்தப் பாதையில் எத்தனையோ பேர் குண்டுக்கு இலக்காகி இறந்திருக்கிறார்கள். ஆனால் தேவன் எங்களோடு இருந்தார்.

அந்தக் கோரமான நாட்களில் பலர் இறந்தும், காயங்கள் பட்டும், நோய்வாய்ப்பட்டும் அதற்கான மருத்துவ வசதியுமில்லாமல் துன்பப்பட்டார்கள். பட்டினிச் சாவுகளும் கூட அங்கே நடந்தன. ஆனால் சகல துன்பங்களிலிருந்தும் தேவன் என்னையும், என் குடும்பத்தாரையும், என்னோடு கூட இருந்தவர்களையும் தன் சிறகுகளால் மூடிப் பாதுகாத்தார். சிறு கீறல் காயமேனும் எமக்கு ஏற்படவில்லை.

-தொடரும்-

Wednesday, 18 April 2012

அற்புத ஒளியே.. அபிஷேக மழையே..
ஆனந்தக் கடலே.. உமை ஆராதித்தேனே..
அக்கினி மயமே.. என் கண்ணின் ஒளியே
வீசிடும் காற்றே.. என் உயிரானவரே..

                                 ****

உண்மையின் வடிவே உன்னத சீலா
உள்ளம் மகிழ்ந்தே உவகை கொண்டேனே
வெண்மையின் நிறமே என்மன வேந்தே
வெற்றியின் பாதையில் அழைத்துச்சென்றீரே

ஆதர வளிக்கும் ஆயனும் நீரே
ஆருயிரே என் அன்பனும் நீரே
தாழ்ச்சியில் என்னை தாங்கி நின்றீரே
தாள் பணிந்தேன் என் தேவனும் நீரே

தாழ்ச்சியில் என்னை தாங்கி நின்றவரே-உம்
தாள் பணிந்தேன் என் தேவனும் நீரே
செந்தழல் வடிவில் இறங்கிடு வீரே
சிந்தை முழுதும் எனை நிறைத்திடுவீரே

Monday, 2 April 2012

நாம் கிறீஸ்துவுக்கு உடன் சுதந்திரர்

 “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்” ரோமர் 8:14

இன்றைய செய்தி நாம் தேவனுடைய புத்திரர்கள் என்று சொல்கிறது...

யேசுவை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்கும் நாம் அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிறவர்களாக இருக்கிறோம். எனவே நாம் தேவனுடைய புத்திரர்களாகிறோம்.

அது மட்டுமன்றி தொடர்ந்து வரும் வசனங்கள் நாம் அவருடைய வாரிசுக்கள் (சுதந்திரர்) ஆகிறோம் என்கின்றன. இந்த வார்த்தையை விசுவாசித்து அறிக்கையிடுவோமானால், அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிற ஒவ்வொருவராலும் யேசுவைப்போல் செயற்பட முடியும்.

நோய்களைக் குணப்படுத்த முடியும், அற்புதங்களைச் செய்ய முடியும்; பேய்கள் நம்மைக் கண்டு நடுங்கும், அவற்றை ஓட ஓட விரட்டுபவர்களாக நாம் இருப்போம்.. ஏனென்றால் நாம் யேசுவுக்கு உடன் சுதந்திரர் ஆகிறோம்....சக உரிமையாளர் ஆகிறோம். இந்த உரிமை யாராலும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. இதற்கு ஆவியானவர் நம்முடைய ஆவியுடனே சாட்சி கொடுக்கிறார். எங்கள் தந்தை இவ்வுலகில் இருக்கும் எல்லாவற்றிலும் பெரியவர், பெரும் ஐஸ்வரியவான், பெரும் பலசாலி, மாபெரும் வல்லமையுடையவர். எனவே அவருடைய சுவீகார புத்திரர்களாகிய நாம் அவருடைய சுதந்திரர் என்ற உரிமையை சுதந்தரித்துக் கொள்வோமா...


 ஜெபம்:
அன்புத் தந்தையே... உம்மை நாங்கள் தந்தை என்று அழைக்கும் உரிமையைத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வில் நாம் உம்முடைய உரிமைக்காரராக வாழும்படிக்கு, தேவ ஆவியானவரின் வழிநடத்தல் எப்போதும் எங்களுடன் இருக்கும் படியாக ஜெபிக்கிறோம். யேசுவின் நாமத்தினாலே நாம் சோதனைகளையும் எதிர் கொள்ளும்படியாக எங்களைப் பலப்படுத்தும்படி ஜெபிக்கிறோம்.

ஆமென்

Sunday, 25 March 2012

இன்றைய செய்தி


 “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும்  சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப் பட்டிருக்கிறவர்கள் என்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.”
 -1 பேதுரு 3:9
ஒரு கிறீஸ்தவ வாழ்வின் ஆரம்பமே இது தான். ஒரு கிறீஸ்தவன் தீமைக்குத் தீமை செய்யாமல் விட்டு விடுவது மட்டுமல்ல, தீமை செய்கிறவர்களைத் தேடிச் சென்று நன்மை செய்ய வேண்டும். எம்மை உதாசீனப் படுத்துபவரை நாம் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது மட்டுமல்ல அவரைக் கனப்படுத்த வேண்டும். ஏனென்றால் நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கப் பிறந்தவர்கள். இப்படிச் செய்யும் போது கர்த்தர் நம்மைக் கனப்படுத்துவார், ஆசீர்வாதங்களினாலே நிரப்புவார்.
இதை யேசுக் கிறீஸ்து இதை நமக்கு செய்து காட்டினார். தன்னை மறுதலித்து சபித்து சத்தியம் பண்ணத் தொடங்கிய பேதுருவை பிரதான ஊழியக்காரனாக்கினார். அவரை அடித்து சித்திரவதை செய்து அவமானப்படுத்தி நிர்வாணமாகத் தொங்க விட்டவர்களுக்காக பிதாவிடம் சிலுவையில் இருந்தபடியே “இவர்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியாது, இவர்களை மன்னியும்” என்று பரிந்து பேசுகிறார்.
யேசுவிடம் சென்று ஏழு தடவை மன்னித்தால் போதுமா என்று கேட்டதற்கு ஏழெழுபது தடவை மன்னியுங்கள் என்றார். இதன் கருத்து 490 தடவை மன்னியுங்கள் என்பதல்ல.. தொடர்ச்சியாக மன்னியுங்கள் என்பதே.
1பேதுரு 3:9-13 வரையான வசனங்கள் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றன. பொல்லாப்பான, கபடமான வார்த்தைகளைப் பேசக்கூடாது. தீய காரியங்களை விட்டு விலகி, நன்மை செய்பவர்களாக, சமாதானத்தைத் தேடுபவர்களாக அதைப் பின்தொடர வேண்டும். நாம் தீமையைப் பின் தொடர்ந்தால், ஒரு வேளை நாம் திரும்பி நடக்கும் போது அது நம்மைப் பின் தொடரும். எனவே சம்மதானத்தைத் தேடுவோம்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால் அவருக்குரியவற்றை சுதந்தரித்துக் கொள்ளும் சுதந்திரரும் ஆகிறோம். அவருடனே நாம் மகிமைப்படுவதாயின் அவருடனே சேர்ந்து பாடுபடவும் வேண்டும் என ரோமர் 8: 17 ம் வசனம் கூறுகிறது. எனவே நாம் வேதம் சொல்வது போல, கர்த்தராகிய யேசுக் கிறீஸ்து வாழ்ந்து காட்டியது போல வாழும் போது சகலவற்றுக்கும் சுதந்திரராகிறோம். நீதிமான்களின் ஜெபம் கேட்கப் படுகிறது.

ஜெபம்:
அன்பான ஆவியானவரே, நாங்கள் தேவ பிள்ளைகளாக உம்முடைய வல்லமையை, உம்முடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் வாழ்ந்து காட்டிய வாழ்வை வாழ வாஞ்சிக்கிறோம். எம் நாவையும், உதடுகளையும்  மாய வசனிப்புகளிருந்து காக்கும்படிக்கும், சமாதானத்தைத் தேடும்படிக்கும் எமக்கு வழி காட்டுவீராக. உம் வல்லமையான கரம் எங்களோடு இருக்கும்படி கிருபை நிறைந்த யேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே.
ஆமென்