Friday, 20 April 2012

தன் சிறகுகளாலே என்னை மூடினார்...

சாட்சி- 1
ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பலனே, யுத்த நாளில் என் தலையை மூடினீர்.  -சங்140:7

2006 ம் ஆண்டில் இலங்கையில், என் சொந்த ஊரான மன்னாரிலிருந்து வேலை மாற்றம் பெற்று நானும் என் குடும்பத்தினரும் கிளிநொச்சிக்கு சென்று குடியிருந்தோம். அப்பொழுது 4 வருட யுத்த நிறுத்தம் முறிவடைந்து மெல்ல மெல்ல போர் ஆரம்பித்திருந்தது. இறுதியில் 2008ம் ஆண்டில் போர் மும்முரமாகியது. நானும் என் கணவனும் இரண்டு பிள்ளைகளும் எல்லோரையும் போல இடம்பெயரத் தொடங்கினோம். இரண்டு வாரங்களுக்கு ஒரு இடம் என்ற விகித்தத்தில் மாறி மாறி அலைந்தோம். இந்த வேளையில் நான் கொண்டிருந்த ஒரே நம்பிக்கை –ஆண்டவர் நம்மைக் கை விடமாட்டார், எந்த தீங்கும் நமக்கு நேராது என்பதே. இருந்தாலும் அவ்வப்போது நாம் தப்பமாட்டோமோ என்றும் மனம் எண்ணும்.

நான் ஒரு றோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். அப்போது எனக்கு கல்லறை ஆண்டவர் மேலும் (மரித்த யேசுவை கல்லறையில் வைத்திருப்பது போல ஒரு சுருவத்தை ஆலயங்களில் வைத்திருப்பார்கள். அந்த ஆண்டவரை `கல்லறை ஆண்டவர்` என்றும் `கர்த்தர்` என்றும் கூறுவார்கள்.) பரிசுத்த ஆவியின் வல்லமை மீதும் எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இதனால் எப்பொழுதும் பதுங்கு குழிக்குள் இருந்த வண்ணம் கல்லறை ஆண்டவரின் செபத்தை சொல்லியபடியே இருப்பேன். நான் மிகவும் பயந்தவளாகவே இருந்தேன். இந்த நாட்களில் மூன்று தடவைகள் தொண்டு நிறுவனங்களின் ஒன்றுகூடலுக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தது. வலையன்மடம் ஆலயத்தில் வைத்தியர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களும் சேர்ந்து மக்களுடைய நிலை பற்றியும் அந்நேர சேவைகள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். இந்த ஒன்றுகூடலுக்கு நான் சற்று தொலைவிலிருந்துதான் செல்ல வேண்டியிருந்தது. என் கணவனோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, `ஆவியானவரே என்னோடு கூட வாரும், என்னைப் பாதுகாரும்` என்று உச்சரித்துக் கொண்டே செல்வேன். அப்பொழுது ஆவியானவர் எங்கள் தலைகளுக்கு மேலே புறா வடிவிலே தன் சிறகுகளை அகல விரித்துக் கொண்டு வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வேன். அந்தக் கற்பனை என்னைத் தைரியப் படுத்தியது. அது பயங்கர செல்வீச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்தப் பாதையில் எத்தனையோ பேர் குண்டுக்கு இலக்காகி இறந்திருக்கிறார்கள். ஆனால் தேவன் எங்களோடு இருந்தார்.

அந்தக் கோரமான நாட்களில் பலர் இறந்தும், காயங்கள் பட்டும், நோய்வாய்ப்பட்டும் அதற்கான மருத்துவ வசதியுமில்லாமல் துன்பப்பட்டார்கள். பட்டினிச் சாவுகளும் கூட அங்கே நடந்தன. ஆனால் சகல துன்பங்களிலிருந்தும் தேவன் என்னையும், என் குடும்பத்தாரையும், என்னோடு கூட இருந்தவர்களையும் தன் சிறகுகளால் மூடிப் பாதுகாத்தார். சிறு கீறல் காயமேனும் எமக்கு ஏற்படவில்லை.

-தொடரும்-

Wednesday, 18 April 2012

அற்புத ஒளியே.. அபிஷேக மழையே..
ஆனந்தக் கடலே.. உமை ஆராதித்தேனே..
அக்கினி மயமே.. என் கண்ணின் ஒளியே
வீசிடும் காற்றே.. என் உயிரானவரே..

                                 ****

உண்மையின் வடிவே உன்னத சீலா
உள்ளம் மகிழ்ந்தே உவகை கொண்டேனே
வெண்மையின் நிறமே என்மன வேந்தே
வெற்றியின் பாதையில் அழைத்துச்சென்றீரே

ஆதர வளிக்கும் ஆயனும் நீரே
ஆருயிரே என் அன்பனும் நீரே
தாழ்ச்சியில் என்னை தாங்கி நின்றீரே
தாள் பணிந்தேன் என் தேவனும் நீரே

தாழ்ச்சியில் என்னை தாங்கி நின்றவரே-உம்
தாள் பணிந்தேன் என் தேவனும் நீரே
செந்தழல் வடிவில் இறங்கிடு வீரே
சிந்தை முழுதும் எனை நிறைத்திடுவீரே

Monday, 2 April 2012

நாம் கிறீஸ்துவுக்கு உடன் சுதந்திரர்

 “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்” ரோமர் 8:14

இன்றைய செய்தி நாம் தேவனுடைய புத்திரர்கள் என்று சொல்கிறது...

யேசுவை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்கும் நாம் அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிறவர்களாக இருக்கிறோம். எனவே நாம் தேவனுடைய புத்திரர்களாகிறோம்.

அது மட்டுமன்றி தொடர்ந்து வரும் வசனங்கள் நாம் அவருடைய வாரிசுக்கள் (சுதந்திரர்) ஆகிறோம் என்கின்றன. இந்த வார்த்தையை விசுவாசித்து அறிக்கையிடுவோமானால், அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிற ஒவ்வொருவராலும் யேசுவைப்போல் செயற்பட முடியும்.

நோய்களைக் குணப்படுத்த முடியும், அற்புதங்களைச் செய்ய முடியும்; பேய்கள் நம்மைக் கண்டு நடுங்கும், அவற்றை ஓட ஓட விரட்டுபவர்களாக நாம் இருப்போம்.. ஏனென்றால் நாம் யேசுவுக்கு உடன் சுதந்திரர் ஆகிறோம்....சக உரிமையாளர் ஆகிறோம். இந்த உரிமை யாராலும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. இதற்கு ஆவியானவர் நம்முடைய ஆவியுடனே சாட்சி கொடுக்கிறார். எங்கள் தந்தை இவ்வுலகில் இருக்கும் எல்லாவற்றிலும் பெரியவர், பெரும் ஐஸ்வரியவான், பெரும் பலசாலி, மாபெரும் வல்லமையுடையவர். எனவே அவருடைய சுவீகார புத்திரர்களாகிய நாம் அவருடைய சுதந்திரர் என்ற உரிமையை சுதந்தரித்துக் கொள்வோமா...


 ஜெபம்:
அன்புத் தந்தையே... உம்மை நாங்கள் தந்தை என்று அழைக்கும் உரிமையைத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வில் நாம் உம்முடைய உரிமைக்காரராக வாழும்படிக்கு, தேவ ஆவியானவரின் வழிநடத்தல் எப்போதும் எங்களுடன் இருக்கும் படியாக ஜெபிக்கிறோம். யேசுவின் நாமத்தினாலே நாம் சோதனைகளையும் எதிர் கொள்ளும்படியாக எங்களைப் பலப்படுத்தும்படி ஜெபிக்கிறோம்.

ஆமென்