உலகில் தம்மைப்
பற்றி பெருமை பாராட்டுகிறவர்கள் தான் அதிகம். ”நான் படிச்ச படிப்பு தெரியுமே?”, என்ர
பரம்பரையே இப்படித்தான்..., ”நானே ஒரு பணக்காரன், எனக்கே இவை பணச்செருக்கு காட்டினம்”,
”என்னை யாரும் வெல்ல முடியுமே?”, ”நான் பைபிளோடயே வாழ்றனான், எனக்கே பைபிளைப் பற்றிக்
கதைக்கினம்...” இப்படி பேசுகிறவர்களாயும், மனதுக்குள் குமுறுகிறவர்களாயும் நாம் வாழ்கிறோம்.
தம்மைக் குறித்து மேன்மை பாராட்டுகிறவர்களுக்காகத் தேவன் தந்த வார்த்தை தான் “உள்ளவைகளை
அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும்
தேவன் தெரிந்துகொண்டார்.” (1கொரி.1:27-29)
இந்த வேத வாக்கியத்தின்
ஆதாரபூர்வமான பல நிகழ்வுகளை நாம் பரிசுத்த வேதாகமத்திலேயே காணலாம். பலமானதை வெட்கப்படுத்த
பலவீனமானதைத் தெரிந்து கொண்டார் என்ற வசனத்தைப் பார்த்த போது எனக்கு உடனடியாக நினைவு
வந்தது தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு முன்பாக தேவன் கோலியாத் என்ற பெரும்
பலம் வாய்ந்தவனை வெட்கப்படுத்திய சம்பவம் தான்.
நம்மில் பலர்
நாம் பரிசுத்தவான்கள் என்று எண்ண ஆரம்பிக்கும் போது, தவறு செய்கின்ற மற்றவர்களை இலகுவாக
பாவிகள் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் எந்த அளவிற்கு நமது பரிசுத்தத் தன்மையில்
திடமாய் இருக்கிறோம் என்பதை சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது நாமே புரிந்து கொள்ள முடியும்.
அதனால் தான் யேசுக்கிறீஸ்து பாவிகளை அதிகம் அன்பு கூர்ந்தார். பாவிகளுக்காகவே இந்த
பூமியில் அவதரித்தார். இன்றுவரை அவருடைய பரிசுத்தத்தன்மைக்கு முன், உலகத்தின் எந்த
மனிதனும் தம்மைப் பரிசுத்தமானவன் என்று மேன்மை பாராட்டமுடியவில்லை..
அந்தக் காலத்தில்
எத்தனையோ பேர் யேசுவை தம் வீட்டுக்கு அழைக்க ஆவலாக இருக்கும்போது. பாவி என்று விமர்சிக்கப்
படுகிற, மற்றவர்களோடு ஒப்பிடும் போது தோற்றத்தில் குள்ளனாக இருந்த சக்கேயுவின் வீட்டுக்கு
யேசு சென்றார் என்று வேதம் சொல்கிறது.
தேவன்
ஞானிகளை. அவருடைய எல்லையற்ற ஞானத்தின் முன்னே தன்னை ஞானி என்று சொல்லிக் கொள்பவன் யார்?
இதுபோலவே யேசுவோடு கூட இருந்தவர்கள் பெரிதும் படித்தவர்களோ அல்லது செல்வாக்கு உடையவர்களோ
அல்ல. யேசு தெரிந்து அனுப்பிய 70 பேரும் அவரிடம் திரும்பிவந்து “ஆண்டவரே, உம்முடைய
நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்கு கீழ்படிகின்றது” என்று கூறிய போது, யேசு கிறீஸ்து
“இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்
உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” (லூக்கா 10:21) என்று பிதாவைத் துதிக்கிறார்.
இவை மூலமாக தம்மட்டில்
நொந்துபோயிருக்கும் உள்ளங்களுக்கு தேவன் ஒரு நல்ல செய்தி சொல்லுகிறார். ”நான் தாழ்ந்து
போனேனே... என் வாழ்வு இப்படி தாழ்ந்து போய் கிடக்கிறதே... எல்லாவற்றிலும் குறைவுள்ளவனாய்
இருக்கிறேனே என்று பரிதவிக்கிறீர்களா?... என் அன்புச் சகோதரர்களே... தேவன் சொல்லும்
நல்ல செய்திய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களையும் என்னையும் தேவன் பயன்படுத்த
வல்லவராக இருக்கிறார்... அவர் நம்மை பயன்படுத்த விரும்புகிறார்...
சுவிசேசத்தை
அறிவிக்க எத்தனையோ பேர் இருக்க, தண்ணீர் மொள்ள வந்த சமாரியப் பெண்ணிடம் தன்னை வெளிப்படுத்தினார்.
நம் தேவன் நல்லவர்.
எமக்கு கிடைத்துள்ள
விசேஷித்தவை எவையும் (குணம், திறமை, பட்டம், பதவி, அழகு போன்றன) தேவனால் எமக்கு அருளப்பட்ட
ஆசீர்வாதங்கள். அவை குறித்து மேன்மை பாராட்டாமல், நம்மைத் தாழ்த்தி, நம் தேவனைக் குறித்தே
மேன்மை பாராட்டுவோம்..
அதனைத்தான் தேவன்
கூறுகிறார், “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடைக்
காரனாயிருக்கக் கடவது” (மாற் 9,10;43-44). இதைத்தான் எம்மை நேசிக்கும் ஆண்டவர் எம்மிடம்
எதிர்பார்ப்பது.
எனவே கிறீஸ்துவுக்குள்
அன்பான சகோதர சகோதரிகளே.... எம்மைத் தரை மட்டும் தாழ்த்தி தேவனை உயர்த்துவோம்... அவர்
நம்மை உயர்த்துவார்..
ஆமென்