Thursday, 14 March 2013

அன்புத் தேடல்.... “ஓ.. நெஞ்சமே, ஏன் அழுகிறாய்.....”
பாடல் வரிகள் வெந்து கொண்டிருந்த என் உள்ளத்தில் பனித்தூவல்கள் போல் இறங்கிக் கொண்டிருந்தன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் என் நெஞ்சம் அழுது அழுது சோர்ந்து போய், விரக்தியின் விளிம்பை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது.
சிறுவயது முதல் எனக்குள் ஒரு தேடுதல் இருந்து கொண்டே தான் இருந்தது. அது ‘அன்பு’ என்ற ஒரு அரிய பொக்கிசம். இயற்கையாகக் கிடைத்த எந்த அன்பிலும் என் உள்ளம் திருப்தி அடைய மறுத்தது. எப்பொழுதோ நான் பெறத்தவறிய அன்பைக் காலப்போக்கில் பலமடங்காக எதிர்பார்க்கத் தொடங்கியது என் உள்ளம். இந்த தேடல் ஏனோ... ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறைவடைந்து போனது..

ஆனால் மீண்டும் என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய தனிமையை சந்திக்கிறேன். இந்தத் தனிமை என்னை மீண்டும் அதே அன்புத் தேடலுக்குள் இழுத்துச் சென்றது. ஆனால் இந்தத்தடவை, இதில் ஒரு ஆச்சரியம்.. என்னவென்றால், நான் தேவனை அறிந்தவளாக, இரட்சிக்கப்பட்டவளாக இருந்தும், அன்பைத் தேடி அலைந்தது தான். உலக அன்பைத் தேடி என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். நான் தள்ளப்பட்டிருந்த தனிமை என்னைப் பயங்கரமாய் ஆட்டுவிக்க, என்னை அறியாமலே ஒரு வெறித்தனமான தாகம் என்னை ஆட்கொண்டிருந்தது... அன்பு வேண்டும்... மற்றவர்களுடைய அன்பு வேண்டும் என்பதற்காகாக அவர்களை அன்பு செய்தேன். இன்னும் கூறப்போனால், முகம் தெரியாதவர்களையும் கூட அன்பு செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதற்குப் பதிலாக எனக்குக் கிடைத்தது பலருடைய வெறுப்பும் கோபமும் அலட்சியமும் அவமதிப்புமே.

இரண்டு வாரங்களுக்கு முன், எல்லாம் முடிந்து போனது போன்ற உணர்வு. அன்பைத்தேடி அலைந்து அவமானப்பட்டது போன்ற உணர்வு... சே..என்ன உலகம் இது.. ஒரு அன்பைக் காட்ட காசா பணமா செலவழிக்கப் போகிறார்கள்.. ஒரு மனிதனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத உலகமாக இருக்கிறதே...என்றெல்லாம் எனக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன். வேதனையில் என் உள்ளம் வெந்துகொண்டிருந்தது. வெறுப்பும் விரக்க்தியும் கொண்ட நான், ஒருநாள் தூக்கம் இன்றி, தொடர்ச்சியாக 24 மணி நேரம் இடைவெளியின்றி, மனதை மிகவும் வருத்தும் “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்” என்ற ஒரு திரைப்படப் பாடலை, இயர்போன் (EAR PHONE) மாட்டி, தொடர்ச்சியாக என் காதுகளில் ஒலிக்க விட்டிருந்தேன். அன்றே என் வலைப்பூவில் அந்தப் பாடலைக் கூட ஒரு பதிவாக வெளியிட்டிருந்தேன். அந்த அளவிற்கு மனதில் “நான் கேட்ட எதையுமே இந்தப் பூமி கொடுத்ததில்லை.. முக்கியமாக அன்பைக் கொடுக்க மறுத்த பூமி இது” என்ற விரக்தியில் உழன்றேன்.

உண்மையில் இந்த என்னுடைய குழப்பங்கள் என் ஆத்துமாவிற்கும் தேவனுக்குமிடையில் இடைவெளியுண்டாக்கியிருந்தது. ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் என் ஆத்துமா பலம் குன்றியிருந்தது. பல நாட்களாக கிறீஸ்தவ பாடல்களைக் கூடக் கேட்பதை நிறுத்தியிருந்தேன். தேவ செய்திகளை என் இணைய வலையில் பதிவு செய்ய நினைத்தாலும், முடியாதவளாக துவண்டு போயிருந்தேன். மொத்தத்தில், என் ஆத்துமா சோர்ந்து போயிருந்தது.

இப்படியான ஒரு மோசமான மனநிலைக்குள் அமிழ்ந்துகொண்டிருந்த நான், நேற்றய தினம் தற்செயலாக என் மடிக்கணனியில் பெயரில்லாமல் சேமித்து வைக்கப் பட்டிருந்த இசைக் கோப்பு ஒன்றை ஒலிக்க விட்டேன்.. என்ன ஆச்சரியம்.. இந்தப் பாடல்கள் என் கணனியில் இருந்தது எனக்கே தெரியாதிருந்தது. எப்பொழுதோ, நண்பர் ஒருவருடைய பாடல் இறுவெட்டு என் கையில் கிடைத்த பொழுது, அதில் பல பாடல்கள் இருந்தபடியால் அப்படியே எல்லாவற்றையும் என் கணணியில் சேமித்த போது, இந்தப் பாடல்களையும் என்ன பாடல்கள் என்று தெரியாமலே சேமித்து வைத்திருக்கிறேன்.  அவை தான் மேசியா பாடல்களில் சில.. அந்தப் பாடல்கள் ஒவ்வொன்றாய் ஒலித்த போது நான் அவற்றை நிறுத்த மனமின்றி கேட்டுக் கொண்டிருந்த போது தான் இந்தப் பாடல்.. ஓ நெஞ்சமே....ஏன் அழுகிறாய்... என்ற வரிகள் என் நொந்துபோன உள்ளத்தை ஆறுதல்படுத்த ஆரம்பித்தது. அந்தப் பாடலைத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது தான் இந்தப் பாடல் வரிகள் சில விடயங்களை எனக்கு உணர்த்த ஆரம்பித்தது... என் தேவன் நல்லவர்... என் இளைப்பாறுதல், தேற்றரவு அவராக இருந்தார்.

பாடலுக்கு இங்கே கிளிக்குங்கள்:
“யேசு சிலுவையில் பாடுகள் பட்டதினால்-உன்
பாடுகள் வேதனையும் புரிந்தே இருக்கிறார்....”

என் தேவன் யேசுக்கிறீஸ்து இந்த உலகமாந்தர்களை எத்தனை அன்பு செய்தார்.. ஆனால் அதே மக்கள் அவரைக் காறி உமிழ்ந்தார்களே... கன்னத்தில் அறைந்தார்களே நிர்வாணமாக்கினார்களே... அதே நிர்வாணக் கோலத்தில் பெண்களும் குழந்தைகளும் கூட கூடி நின்ற இடத்தில் அவரை சிலுவையில் உயர்த்தினார்களே... எத்துணை அவமானம், வேதனை... என் ஆண்டவர் பட்ட அவமானத்தை விடவா அதிகமாக ஒரு அவமானம் எனக்கு நேர்ந்துவிட்டது?

என் ஆண்டவர் அன்பு செய்ததற்குப் பதில் அவருக்கு கிடைத்தது மரண தண்டனையல்லவா.... ஆனால்.. உயிர் பிரியும் போதும் கொஞ்சம் கூட விரக்தியடையாமல்,  “பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்,... இவர்களை மன்னியும்” என்று தன் அன்பின் உச்சத்தை வெளிப்படுத்தினாரே.. இதை விட ஒருவர் யாரையேனும் அன்பு செய்ய முடியுமா?...

எல்லாவிதமான சிந்தனைகளும் என்னைத் தாக்க ஆரம்பித்திருந்தது. என் நண்பர் ஒருவர் கூறியிருந்தார்...  “அன்பு தேவை இல்லாதவர்களுக்குப் போய் அன்பைச் செலுத்தினால் அவர்களுக்கு அது அன்பு மழையாகத் தெரியாது... அமில மழையாகத் தான் தெரியும் என்று....

உண்மை... எவ்வளவு பெரிய உண்மை. பசி இல்லாதவனுக்கு உணவு கொடுப்பது எந்த வகையில் பலனளிக்கும்?... பசியோடு இருக்கிறவனை அல்லவா நான் தேடித்திரிந்து உணவளித்திருக்க வேண்டும். நான் எங்கே தவறிழைத்தேன் என்பதை அன்றே என் நண்பர் சுட்டிக் காட்டியிருந்தாலும்.. அப்பொழுது எனக்குப் புரிந்துகொள்ளமுடியவில்லை அந்த உண்மையைப் புரிந்து கொள்ளக்கூட எனக்குத் தேவ பெலன் தேவைப்பட்டிருக்கிறது. அன்பத் தேடி அலைபவர்கள் இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு யேசுவின் அந்த எல்லையில்லாத அன்பைக் கொடுக்க முடிந்தால், அதை விட ஒரு ஊழியம், சமூகப்பணி இருக்க முடியாது அல்லவா...

இன்று என் உள்ளம் தெளிவடைந்தது போலிருக்கின்றது... இனிமேல் என் தேடலை மாற்றி விட முயற்சிக்கிறேன்.. “அன்பு எனக்குத் தேவை” என்று தேடுவைதை விடுத்து... “அன்பு யாருக்குத் தேவை” என்ற தேடலோடு முயற்சிக்கப் போகிறேன்.. அதுவே என் தேவன் எனக்காக கொடுக்க இருக்கும் ஊழியமாகக் கூட இருக்கலாம். அதை அவர் ஒருவரே அறிவார்.

பிரியமானவர்களே... உலகில் அன்பே கிடைக்காமல் உடைந்து போயிருக்கும் உள்ளங்களை என் தேவன் எனக்குக் காட்டவேண்டுமென்று, அவர்களுக்குப் பயன்படும் ஒரு கருவியாக என்னை தேவன் தாமே பயன்படுத்த என்னோடு சேர்ந்து எனக்காக தேவனை வேண்டுவீர்களா..?