Thursday, 21 January 2016

நீ யாராயிருக்கிறாய்… தேவன் உன்னையும் பயன்படுத்த வல்லவர் ……….

கிறீஸ்த்துவுக்குள் அன்பான சகோதரர்களே,
நீண்ட நாட்களாக என் மனதிலே உங்களுக்குச் சொல்லத் துடித்துக் கொண்டிருந்த
விடயம் சொல்லிவிட வேண்டுமென்ற ஆர்வமே இன்று பிறக்கும் இந்தக் கட்டுரை.

அண்மையில் தற்செயலாக கர்நாடாகாவின் பெரும் சுவிசேசகர் ராம்பாபு அவர்களின்
சாட்சியைக் கேட்ட போது என் எண்ணத்தில் தேவனை நம்பாதவரும், அவருடைய 
மக்களைப் பரியாசம் பண்ணுகிறவரும், அவர்களை வெறுக்கிறவரும் இன்னும் தேவனைத்
தூஷித்தவருமாக இருந்த இளைஞனை ஒரே நாளில் ஒரே இராத்திரியில் தொட்டு 
விடும் வல்லமை தேவனுக்கேயுரியது என்ற எண்ணத்தையே அச்சாட்சி தோற்றுவித்தது.

தேவன் தம்மை வெறுக்கிறவர்களையும், தம் கட்டளையை அசட்டை செய்து ஓடி 
ஒளிய நினைக்கிறவர்களையும், மனதளவில் துணிச்சல் அற்றவர்களையும் கூட தன்
காரியத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை வேதத்தின் பல இடங்களில் காண்கிறோம்.

யோனா என்கிற தீர்க்கதரிசியைப் பற்றி கிறீஸ்தவ நண்பர்கள் அறிந்திருக்கலாம். 
வேதாகமத்தின் 32வது நூலாக நான்கே நான்கு அதிகாரங்களைக் கொண்ட மிகச் 
சிறிய வரலாற்று நூலாக இது காணப்படுகிறது. அங்கே யோனாவைப் பற்றிப் பார்க்கும்
போது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக யோனா நடந்து கொள்கிறார். அசீரியாவின் 
தலைநகரான நினிவே என்கிற பட்டனத்துக்குப் பிரசங்கிக்கும் படி தேவன் 
கட்டளையிடுகிறார் யோனாவோ அதை மறுத்து, தேவனை விட்டு ஓடி ஒழியலாம் 
என்கிற சிறுபிள்ளைத் தனமான அறியாமையோடு நாட்டை விட்டு ஓட எத்தனிக்கிறார்.
 

யோனா ஏன் பிரசங்கிக்க மறுத்தார் என்பதற்கு வேத ஆராய்ச்சியாளார்கள் கருத்துக்
கூறுகிறார்கள். 
அசீரியா இஸ்ரவேலுக்கு பயமூட்டும் ஒரு அரசாகவே இருந்திருக்கிறது. இதனால் யோனா
அசீரியாவின் மேல் இருந்த வெறுப்பினால் அந்த நாடு தேவனின் கோபத்துக்கு ஆளாகுவது
நல்லதே என்ற எண்ணமுடையவராக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். 
இந்த எண்ணத்தை உறுதி செய்வது போல யோனாவின் புத்தகம் 4 வது அதிகாரத்தில்
தேவனோடே தன் கோபத்தைத் தெரிவிக்கிறார். அது மட்டுமன்றி அந்த நகரத்திலிருந்து
வெளியேறி, அதன் கிழக்குப் பகுதியில் அந்த நகரத்தை தேவன் அழிக்கப் போவதைத்
தன் கண்களால் காண வேண்டுமென்பதற்காக குடிசை போட்டு உட்காருகிறானென்று
வாசிக்கும் போது மிகவும் சிறு பிள்ளை போல தேவனோடு யோனா அடம்பிடிப்பதைக்
காண்கிறோம். 
இந்தச் சம்பவம் எனக்கு ஒரு அழகிய செய்தியை வெளிப்படுத்தியது. தேவனுடைய
வழிகள் வித்தியாசமானவைகளே. மனிதர்களாகிய எமது சிந்தனைக்கு இவை ஆச்சரியத்தை
கொடுக்கின்றனவாகவே இருக்கின்றன. யாரொருவன் அந்த இனத்தை வெறுத்தானோ,
யாரொருவன் தன் கட்டளையை மறுத்து தன் சமூகத்தை விட்டு ஓடி ஒளிய முயன்றானோ,
அவனையே தேவன் அந்த மக்களுக்கு பிரசங்கிக்க அனுப்புகிறார். தேவனைப் பொறுத்தவரையில்
தன் காரியத்தை செய்ய தேர்ந்தெடுப்பவர்கள் யாராகவும் இருக்கலாம்.
அடுத்து நாம் பார்க்கலாம் எரேமியா தீர்க்கதரிசியை. தேவன் அவரை நோக்கி மக்களுக்கு
தன்னுடைய செய்தியைச் சொல்லும் படி கட்டளையிடும் போது, எரேமியா "நான்
சிறு பிள்ளையாய் இருக்கிறேன்" என்று பயப்படுகிறார். அது மட்டுமன்றி தேவ 
வார்த்தையை சொல்லப் புறப்பட்ட பின்பு கூட தேவ வார்த்தையைச் சொல்வதால் 
அவர் பரிகாசத்துக்கும் நிந்தைக்கும் உள்ளாகுவதையிட்டுக் கலங்கி அழுகிறார். 
தான் பிறந்ததே தவறு, தன் தாயின் கர்ப்பத்திலேயே கொலை செய்யப்படாமல் 
போனேனே என்றும் புலம்பி கலங்குமளவுக்கு பலவீனமுடைய மனதினனாக இருப்பதைக்
 காண்கிறோம். அவர் இறுதி வரைக்கும் அந்த மக்களோடு சேர்ந்து பாடனுபவிக்கிறவராக
இருந்தார். தேவன ஒருவனைப் பயன்ப்டுத்த விரும்பினால் அவன் பலசாலியாகத்தான்
இருக்க வேன்டுமென்பதில்லை. இதை வேதாகமத்தில் 1 சாமுவேல் 17ம் அதிகாரத்தில் 
கோலியாத் என்ற பெரும் வீர்னை வீழ்த்த தாவீது எனும் இளைஞனைப் 
பயன்படுத்துவதைக் காண்கிறோம். 
 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மட்டுமன்றி புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் கூட தேவன்
அதே காரியத்தை செய்வதை வேதத்தில் காண முடிகிறது. கிறீஸ்த்தவர்களை வெறுத்த 
அவர்களை கொல்ல வேண்டுமென்ற தீர்மானத்தில் அவர்களைக் கட்டி எருசலேமுக்கு 
கொண்டு வருவதற்கான அனுமதிக் கடிதங்களை வாங்கிக் கொண்டு சென்ற பரிசேயனான
சவுலை ஆண்டவர் சந்திக்கும் சம்பவம் எப்பொழுதும் காணாத அற்புதமாக பிரமிக்க 
வைக்கிறது. இவையெல்லாம் எனக்கு சொல்ல விளைவது மிகப் பெரிய செய்தியையே. 
அது, தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, அதனதன் காலத்தில் எல்லாவற்றையும் 
செய்து முடிக்கிறவர், தன் மக்களை இரட்சிக்க எதிரியையும் பயன்படுத்துபவர் என்ற
செய்தியத்தான். இன்றைக்கும் தம்மை அறியாமலே தேவ மக்களுக்கு நன்மை செய்யும்
சவுல்கள் ஏராளம்.
சகோதரனே சகோதரியே நீ உன்னைக் குறித்து என்ன நினைக்கிறாய்? ஐயோ நான்
பாவி .... நான் தேவ சமூகத்தில் நிற்க தகுதியில்லாதவன் என்ற குற்ற உணர்வோடு
தவிக்கிறாயா? நீ தேவ சமூக்கத்தைத் தவிர்க்க நினைக்கிறாயா? தேவனை வெறுக்கிறாயா?
அல்லது மனத்துணிவற்ற நிலையில அஞ்சி நடுங்குகிறாயா?... 
தேவன் உன்னையும் நேசிக்கிறார்…. உன்னையும் தேவன் பயன்படுத்த விரும்புகிறார்.
 
இங்கே என்னை குறித்த ஒரு சாட்சியையும் குறிப்பிட விரும்புகிறேன். தேவனில் 
அதிக பற்றோடும் நம்பிக்கையோடும் இருந்த எனக்குள், என்னைக் குறித்து ஒரு 
இறுமாப்பு இருந்தது. அடுத்தவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மன்னிக்கவும் 
அன்பு செய்யவும் கூடிய மனநிலை எனக்கு இருந்த போதும், மற்றவர்கள் செய்யும் 
பாவத்தைக் குறித்து அவர்கள் பலவீனமாக ஏற்றுக் கொள்ளாமல் மாறுபாடானவர்கள்
என்றும், அவர்கள் நல்லவர்களாக இருக்க முயற்சிக்க மாட்டார்கள் என்றும் எண்ணிக் 
கொண்டிருந்தேன்.

கர்த்தர் என்னை அழைத்த நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்கு கர்த்தரின் பார்வையில்
எனது குறை அதிகமாகப்பட்டிருக்க வேண்டும். என் இறுமாப்புள்ள உள்ளத்தை 
உடைக்கச் சித்தமானார். அதற்கு என் வாழ்க்கையிலும் ஒரு சவுலைப் பயன்படுத்தினார்.
தேவபக்தியில் திடமாக இருந்த என் வாழ்க்கையில் சூழ்நிலை மாற்றங்களால் 
பெரும் சோர்வு சூழ்ந்து கொண்டது. தனிமையும் துயரும் பற்றிக் கொண்ட போதும்,
தேவ பலம் எனக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அதே வேளையில் என் 
துன்பங்களை ஆற்றும் உறவாக என் நண்பன் தேடி வந்தான். என் தனிமையைப் 
போக்க இறைவன் அனுப்பிய துணையாகத்தான் எண்ணினேன். காலப் போக்கில் 
தேவ பலத்தை விட, நண்பனின் ஆறுதலின் பலம் எனக்கு அண்மையாகப் பட்டது. 
கர்த்தரைப் பற்றியிருந்த என் கரம், நண்பனின் துணையைப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
இத்தனைக்கும் என் நண்பன் கிறீஸ்த்தவர்களைத் தன் இதயம் முழுவதும் கசப்போடு
வெறுப்பவன். அப்படிப்பட்ட, சவுல் போன்ற ஒரு நண்பன் மூலமாக கர்த்தர் என் 
இறுமாப்பை உடைத்தார். என் நண்பனே எனக்கு நான் யார், எத்தனை தூரம் 
பலவீனமானவள் என்பதை உணர்த்தியதோடு, இந்த உலக அன்பு நிரந்தரமானதும் 
அல்ல நிச்சயமானதும் அல்ல என்பதையும் உணர்த்தினான். மீண்டுமாக இயேசுவைக்
கிட்டிச் சேர, ஆண்டவரே நான் வீழ்ந்து கிடக்கிறேனே.. என்னைத் தூக்கும், 
என்னை இரட்சியும், இத்தனை பலவீனமான பாத்திரமாக இருக்கிறேனே என்னைப் 
பலப்படுத்தும் என்று அவரையே சரணடையவும், முன்னை விட அதிகமாக தேவனைப்
பற்றிக் கொள்ளவும் என் அன்பு நண்பன் உதவினான். தேவன் என்னை நீளக்கயிற்றில் 
ஓட விட்டிருந்த போது, விழுந்த பின் தான் திரும்பிப் பார்த்தேன், 2 வருடங்களுக்குள் 
எத்தனை தூரம் தேவனை விட்டு ஓடியிருக்கிறேன் என்று. 
ஆண்டவனின் அளவில்லாத அன்புக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன்.
அது மட்டுமன்றி, தான் அறியாமலே தான் வெறுக்கிற கிறீஸ்தவத்தை அதிகமாகப் 
பற்றிக் கொள்ள உதவிய ஒரு நண்பனைக் கொடுத்ததற்காகவும் தேவனுக்கு நன்றி 
செலுத்துகிறேன். கிறீஸ்தவர்களை வெறுப்பதேயன்றி அவர்களுக்கெதிராக எந்தப் 
பாவமும் செய்யாத என் நண்பனை என்றோ ஒரு நாள் தேவன் பயன்படுத்துவார் 
என்று விசுவாசிக்கிறேன். அதுவரையிலும் அவன் எந்த ஆசீர்வாதங்களிலும் 
குறைவின்றி வாழ என் யேசுவின் நாமத்தினால் பரிசுத்த தேவனை வேண்டிக் கொள்கிறேன். அதற்காக, என் உறவுகளே நீங்களும் என்னோடு கூட இறைவனை வேண்டிக் கொள்வீர்களா?
கர்த்தருடைய நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக.

ஆமென்
Sunday, 10 January 2016

இயேசுவின் சுவிசேஷ அக்கினி சபை- மன்னார் ஆரம்ப நாள்

தேவனின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக!

மன்னார் நகரில் 09/01/2016 அன்று இயேசுவின் சுவிசேஷ அக்கினி சபை நிறுவப்பட்டது. தலைமைப் போதகர் ஸ்.ரீபன்  பரராஜா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, போதகர் பாபுதாஸ் அவர்களின் தலைமையில் ஊழியம் ஒப்படைக்கப்பட்டது.