Sunday, 8 January 2017

என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே....

"என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் 
செய்ய எனக்கு பெலன் உண்டு”
பிலி 4:3-

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே, ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின்
நாமத்தினாலே இந்தப் புதிய ஆண்டில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
 
இந்த வருடத்திலே நான் இஇன்ன இன்ன விடயங்களை செய்யப் போகிறேன் 
என்று ஒரு புது தெம்போடு முடிவெடுத்து வைத்திருப்பவர்களே….
என்னால் எதையுமே செய்ய முடியலையே எனக்கு எண்ட விடயத்தை 
எடுத்தாலும் தோல்வியாக இருக்கிறதே என்று புலம்புகிற அன்பான 
உறவுகளே… உங்களுக்கு ஒரு நல்ல செய்தி…..

உங்களையும் என்னையும் பலப்படுத்துகிறவர் சதாகாலமும் உயிரோடு 
இருக்கிறவராகிய நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்து நம்மோடு இருக்கிறார்.
ஏன் நம்மால் இந்த வார்த்தையை பற்றிக்கொள்ள முடியவில்லை. பயத்தின்
ஆவியும், சோர்வின் ஆவியும் நம்மைப் பற்றிக்கொள்ள நாம் இடம் கொடுக்க 
நேரிடுவது ஏன் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஏனென்றால் கர்த்தர் நமக்கு 
அனுப்பிய தேற்றரவாளனும், துணையாளனுமாகிய பரிசுத்த ஆவியானவருக்கு
நாம் இடங்கொடுக்க மறந்து போகிறோம்.
தேவ கிருபைக்குள் வாழும் எமக்கு அதைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லை.
 
இதற்கு உதாரணமாக நான் அண்மையில் படித்த ஒரு குட்டிக்கதையை 
சொல்லலாம் என்று நினைக்கிறேன். 

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது.. ''அம்மா! நாம் வாழ தண்ணீர்
மிக அவசியமென்று சொல்கிறாய்.
அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.
''அம்மா!நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.
அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.
உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.
உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது.
அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

இப்படித்தான் நாமும் எமக்கு கொடுக்கப்பட்ட கிருபையையும் தேவ பலத்தையும்
உணர்ந்து கொள்ள முடியாதவர்களாய் தவிக்கிறோம். அதனால் தான்
தேவன் உன் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்கிறார். 

 தினமும் காலையில் ஆண்டவரே இன்றைய நாள் உம்முடையதே… 
நீரே என்னை வழிநடத்தும் என்று அவரது வல்லமையான கரங்களில் 
உங்களை ஒப்புக்கொடுத்துப் பாருங்கள்… . அவர் உங்களை பலப்படுத்துவார். 
உன் பலவீனத்தில் என் பலன் பூரணமாக விளங்கும் என்று வாக்குக் கொடுத்த 
தேவன் அவர். அவர் வாக்கு மாறாதவர் என்பதை விசுவசிப்போம். 

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனும் தேவனால் பிறக்கிறான் 
என்று வேதம் சொல்லுகிறது. (1யோவான் 5:1 ) அப்படி தேவனால் பிறந்தவனின் 
பலம் எப்படியானது என்றால், உலகத்தை ஜெயிப்பவன் என்றும் வேதம் 
சொல்கிறது. ஆகவே இயேசுவை விசுவசிக்கிற நாம் ஒவ்வொருவரும் உலகத்தை 
ஜெயம் கொள்ளும் வல்லமை உள்ளவர்கள். இது விசுவாசத்தினாலே ஆகும். 
சிறு பையனான தாவீது கோலியாத்தை வென்றான் என்பதை நாம் அறிகிறோம்.
தாவீது தன்னுடைய பலத்தினால் கோலியாத்தை வீழ்த்தவில்லை என்பது 
எல்லாரும் அறிந்த உண்மை… . அட… ஒரு கல்லால் விழுத்திட்டான் என்பது என்ன 
பெரிய வீரமா? என்று ஏளனம் செய்யத் தோன்றும். ஒருவனுடைய நெற்றிப்பொட்டு 
பலமாக தாக்கப்பட்டால் எந்தப் பெரிய மனிதனாக இருந்தாலும் பிழைக்க மாட்டான் 
என்பது விஞ்ஞானம். இப்படியிருக்க தேவனுடைய பெலம் எங்கே வெளிப்படுகிறது? 
அவனுடைய இருதயம் விசுவாசத்தால் நிரம்பியிருந்தது.
அவன் அப்போது இயேசுவை அறிந்திருக்கவில்லை அந்தக் கிருபை அவனுக்கு 
கிடைத்திருக்கவில்லை. ஆனால் தேவனை விசுவாசித்தான். 1 சாமுவேல் 17:45-47 
வரையிலான வார்த்தைகள் அவனுடைய தேவ விசுவாசம் அவனைப் பலம் கொண்டதாக 
மாற்றியது என்று வெளிப்படையாக தெரிகிறது. கோலியாத்தை எதிர்கொண்டு அவன் 
சொல்கிறான் சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே வருகிறேன்...என்று. 
அவருடைய நாமம் எமக்கு கேடகமாயிருக்கிறது என்ற இரகசியத்தை அந்த சிறுவன் 
அறிந்திருக்கிறான். அதை எதிரி மட்டுமல்ல தன் மக்களும் அறியும்படியாய், கர்த்தர் 
பட்டயத்தாலும் ஈட்டியாலும் இரட்சிக்கிறவர் அல்ல,மாறாக அவருடைய நாமத்தை 
விசுவாசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான் என்பதை எதிரிக்கு முன்னே நின்று 
கூக்குரலிடுகிறான்.. 

அந்த நாமம் எவ்வளவு வலிமையுடையது தெரியுமா? "இதோ சர்ப்பங்களையும் 
தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் 
உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களை சேதப்படுத்தாது…" (லூக்கா 10:19) 
என்று தாம் ஊழியத்துக்காக 70 பேரை அனுப்பிய போது இயேசு சொல்கிறார். 
இது ஊழியக்காரர்களுக்கு சொன்ன வார்த்தையே எனினும் அதே அதிகாரத்தை 
சற்று மேலே பார்ப்போமானால், அந்த எழுபதுபேரும் சொல்கிறார்கள், உம்முடைய 
நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்கு கீழ்ப்படிகிறதே என்று பெரும் சந்தோசத்தோடு 
அவர்கள் சொல்லும்போது தான் இயேசு இதை சொல்கிறார்கள். அவருடைய நாமத்தின் 
வல்லமை பிசாசையும் முறியடிக்கும் வல்லமை. அந்த வல்லமையுள்ள நாமத்தை தேவன் 
எங்களுக்கு கொடுத்திருக்கிறார்…. 

எந்த நல்ல காரியமானாலும் அவை கிறிஸ்துவுக்கும் பிழைத்திருக்கும் எங்களுக்கு 
ஜெயத்தைக் கொடுக்கிறதாகவே அமையும். ஏனென்றால் வாழ்வது நானல்ல...
எனக்குள் கிறிஸ்து வாழ்கிறார். அதனால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலம் உண்டு, 
ஏனென்றால் என்னை பெலப்படுத்துகிறவர் மாபரன் இயேசு என்று அறிக்கை செய்வோம். 
இதைச் சொல்லச் சொல்ல உங்கள் ஆத்துமா பலப்படுவதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். 


ஜெபிப்போம்: 
என்னைப் பலப்படுத்தும் வல்லமையுள்ள தேவனே, நீர் எனக்குள் வாசம் செய்கிறதற்காக 
உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் ஒவ்வொரு காரியத்திலும் என்னை நீரே வழிநடத்தும். 
உம்முடைய பலத்தினாலே என்னை வழிநடத்தும். என் பலத்தினாலே அல்ல என் 
பராக்கிரமத்தினாலே அல்ல, என் தேவனாகிய உம்முடைய ஆவியினாலே எல்லாம் ஆகும் 
என்பதை நான் விசுவசிக்கிறேன். என் ஆவி, ஆத்துமா சரீரம் யாவையும் உம்முடைய 
கரங்களிலே ஒப்புக் கொடுக்கிறேன் என் ஜீவனுள்ள நல்லபிதாவே.
ஆமென்